மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நைஜீரியாவில் அரசுக்கு எதிராக சட்டவிரோதமாக இயங்கிவரும் கொள்ளையர்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இதில் அப்பாவி மக்கள்தான் தொடர்ந்து பலியாகி வருகிறார்கள்
வடமேற்கு நைஜீரியாவின் பல மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் இரத்தக்களரியைத் தடுக்க கொள்ளைக்காரர்களுடன் சமாதான ஒப்பந்தங்களை நாடியுள்ளனர், ஆனால் இந்த ஒப்பந்தங்கள் அதனை முடிவுக்குக் கொண்டுவரத் தவறிவிட்டன. கடந்த மாதம் ஒரு கிராமத்தை கொள்ளையர்கள் பழிவாங்கும் தாக்குதலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியாவின் வடக்கு கடுனா மாநிலத்தில் உள்ள கிராம மக்கள் மீது ஞாயிற்றுக்கிழமை ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நைஜீரிய எம்.பி. சயாத் இப்ராஹிம் திங்களன்று ஏ.எப்.பியிடம் கூறுகையில், ''இதுவரை 50 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, ஆனால் அந்த எண்ணிக்கை முடிவானது அல்ல, அது அதிகரிக்கக் கூடும். மீட்பு முயற்சிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன'' என்றார்.
இதுகுறித்து அரசு வழக்கறிஞர் தயாபு கெராவா ஏஎப்பியிடம் கூறியதாவது:
கடுனா மாநிலத்தில் உள்ள கேராவா, ஜரேயாவா மற்றும் மிண்டா கிராமங்களுக்குள் சுமார் 100 ஆயுதமேந்திய கும்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் புகுந்து, பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களை சுட்டுக் கொன்றுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு வன மறைவிடங்களில் கொள்ளையர்கள் தங்கியுள்ள இடங்கள் குறித்து ராணுவத்திற்கு தகவல் இக்கிராம மக்கள் தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில்தான் ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை கொள்ளையர்கள் மீது நடத்தியது. அதனால் வெறுப்படைந்த கொள்ளையர்கள் பதிலடியாகவே கிராமத்தினர் மீது இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
கொள்ளையர்களின் தாக்குதலில் பலியானவர்கள் 51 பேர் நேற்றிரவே உடனடியாக அடக்கம் செய்யப்பட்டனர்.
இவ்வாறு அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.