விபத்து நடந்த ரோஹ்ரி ரயில் நிலையம் அருகான ஆளில்லா கிராஸிங். 
உலகம்

பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதி 20 பேர் பலி: ஆளில்லா ரயில்வே கேட்டில் நடந்த பரிதாபம்

பிடிஐ

பாகிஸ்தானில் நேற்றிரவு படுவேகமாக வந்த ரயில் ஆளில்லா ரயில்வே கேட் வழியே வந்த பேருந்து மீது மோதியதில் 20 பேர் பலியானதாகவும் இதில் படுகாயமடைந்த மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிந்து மாகாணத்தில் நடந்த இந்த பயங்கர விபத்து குறித்து சுக்கூர் ஆணையர் ஷபிக் அகமது மகேசர் கூறியதாவது:

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் ரோஹ்ரி ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இந்த விபத்து நடந்தது. ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் பேருந்து மீது மோதியது.

ரோஹ்ரி அருகே 45 யுபி பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சுக்கூரிலிருந்து பஞ்சாபிற்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து ரோஹ்ரி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆளில்லா ரயில்வே கேட் வழியாக சென்றபோது வேகமாக வந்த ரயில் மோதியது. இந்த விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

பலியானவர்களில், சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்றவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்றபோது உயிரிழந்தனர். மேலும் பல காயமடைந்தவர்களின் நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

இவ்வாறு சுக்கூர் ஆணையர் ஷபிக் அகமது மகேசர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஒருவர் விபத்து குறித்து தெரிவித்தபோது, ''இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் தவறு செய்துள்ளார். மோதியதில் ரயிலின் இயந்திரம் சேதமடைந்துள்ளது, ரயில் என்ஜினினின் உதவி டிரைவர் காயமடைந்தார்'' அவர் கூறினார்.

SCROLL FOR NEXT