ஈரானில் கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஈரானின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஈரானில் இன்று (வெள்ளிக்கிழமை) கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 8 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கோவிட் -19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 388 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 73 பேர் காய்ச்சல் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், ஈரானின் துணை அதிபர் மவுசமெக் எம்தெகர் கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.