பிரதமர் நரேந்திர மோடி நல்ல மனிதர், மிகச் சிறந்த தலைவர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த 24, 25-ம் தேதிகளில் அதிபர் ட்ரம்ப் இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். கடந்த 24-ம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்றார். அங்கு நடைபெற்ற ‘நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் 1.6 லட்சம் பேர் பங்கேற்றனர். பின்னர் ஆக்ராவுக்கு சென்ற ட்ரம்பும் அவரது மனைவி மெலானியாவும் தாஜ் மஹாலின் அழகை கண்டு ரசித்தனர்.
கடந்த 25-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிபர் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே ரூ.21,000 கோடிக்கு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பிறகு நிருபர்களுக்கு தனியாக பேட்டியளித்த ட்ரம்பிடம், குடியுரிமை சட்டம், டெல்லி வன்முறை தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், 'குடியுரிமை சட்டம், டெல்லி வன்முறை ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் பெர்னி சாண்டர்ஸ் கூறும்போது, "டெல்லி கலவரத்தை, மனித உரிமை மீறலை அதிபர் ட்ரம்ப் கண்டிக்க தவறிவிட்டார். அவருக்கு தலைமை பண்பு இல்லை" என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி நல்ல மனிதர், மிகச்சிறந்த தலைவர், இந்தியா வியக்கத்தக்க நாடு. எனது பயணத்தால் இருநாட்டு உறவு மேலும் வலுவடைந்துள்ளது. இந்தியாவுடன் பல கோடி டாலர் மதிப்புள்ள வணிகத்தில் ஈடுபட உள்ளோம்” என்று தெரிவித்தார்.