கேரி யாங் 
உலகம்

அசாஞ்சேவுக்கு நேர்ந்ததை உலகம் அறியும்: பிரிட்டன் மூத்த பத்திரிகையாளர் வேதனை

செய்திப்பிரிவு

பிரிட்டனை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கேரி யாங். ‘தி கார்டியன்' நாளிதழ் சார்பில் அமெரிக்காவில் நீண்ட காலம் பணியாற்றியவர். பத்திரிகை பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ‘தி இந்து' ஆங்கில நாளிதழின் மூத்த நிருபர் மீரா ஸ்ரீநிவாசனுக்கு ஸ்கைப் வழியாக அவர் பேட்டியளித்துள்ளார்.

பணி ரீதியாக, தனிப்பட்ட முறையில் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

கடந்த 2008-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் பராக் ஒபாமா சிகாகோவில் உள்ளகிரான்ட் பார்க் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். அனைத்து பத்திரிகையாளர்களும் அந்த நட்சத்திர ஓட்டலில் குவிந்திருந்தனர். நான் அங்கு செல்லவில்லை.

அதேநகரில் கருப்பின மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றேன். அங்கே நிருபர்கள் கிடையாது. தொலைக்காட்சி கேமராக்கள் கிடையாது. அப்பகுதியில் உள்ள விடுதிக்கு சென்றேன். அங்கு பராக் ஒபாமா வெற்றி செய்தியை கேட்ட ஓர் இளைஞரின் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தது. இதற்கு நேர்மாறாக மற்றொரு பெண் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். அவரது கணவர் ராணுவ வீரர். ஆப்கானிஸ்தானில் பணியாற்றுகிறார். ஆப்கானிஸ்தான் போரை, ஒபாமா ஆதரிப்பதால் எனது கணவர் வீடு திரும்ப மாட்டார் என்று அந்த பெண் கண்ணீர்விட்டு அழுதார். அதிகார மையத்தில் இருந்து சற்று தள்ளிச் சென்றால் எண்ணிலடங்கா விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்.

உங்கள் எழுத்துகளில் இனம், வர்க்க ரீதியான தாக்கம் உள்ளதே?

உழைக்கும் வெள்ளை இன மக்கள் மத்தியில் நான் வளர்ந்தேன். அரசியல் ரீதியான எனது முதல் அறிமுகம் மார்க்ஸ், டிராட்ஸ்கி. எப்போதெல்லாம் மக்கள் இனம், பாலினம், மதம் போன்ற விஷயங்களை ஒரு வர்க்க அலசலின்றி பேசுகிறார்களோ, அந்த விவாதங்கள் வலுவாக இருப்பதில்லை. வர்க்க பரிமாணம் இல்லாமல் போகும்போது அவை வெறும் அடிப்படைவாதங்களே. இனம், வர்க்கம், நிறம், மதம், தேசம் என்ற எந்த விதமான அடிப்படைவாதமாக இருந்தாலும் அதை நான் எதிர்க்கிறேன்.

விக்கிலீக்ஸ், எட்வர்ட் ஸ்னோடன், பனாமா பேப்பர்ஸ் குறித்து...

திரைமறைவு ரகசியங்களை அம்பலப்படுத்தி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஊடகங்களின் வலிமை மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, எட்வர்ட் ஸ்னோடனுக்கு என்ன நேர்ந்தது என்பதை உலகம் அறியும். பனாமா பேப்பர்ஸ் அறிக்கையை நிருபர்கள் குழு வெளியிட்டதால் தனிப்பட்ட முறையில் யாரும் பாதிக்கப்படவில்லை.

சமூக ஊடகங்களுடனான தொடர்பு...

ட்விட்டர் என்பது உலகம் கிடையாது. அது உலகத்தின் ஒரு பகுதி. ஆனால் இளம் தலைமுறை பத்திரிகையாளர்கள் அதுவே தங்கள் உலகமாக கருதுகின்றனர். எனது குடும்பம் பெரியது. அவர்களுக்காக எனது குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறேன்.

SCROLL FOR NEXT