உலகம்

இட்லிப்பில் சிரிய அரசுப் படைகளை அகற்றுவோம்: துருக்கி சபதம்

செய்திப்பிரிவு

இட்லிப்பிலிருந்து சிரிய அரசுப் படைகள் அகற்றப்படும் என்று துருக்கி ராணுவம் சபதம் ஏற்றுள்ளது.

இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, “இட்லிப்பிலிருந்து சிரிய அரசுப் படைகள் அகற்றப்படும். இந்த மாத இறுதிக்குள் சிரிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள எங்கள் கண்காணிப்புத் தளங்களை ஏதோ ஒரு வழியில் அகற்றத் திட்டுமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இதில் துருக்கியின் கண்காணிப்புத் தளங்களும் அடங்கும். இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது.

முன்னதாக,சிரியாவின் டெர்ரா நகரின் தெற்குப் பகுதியில், 2011-ம் ஆண்டில் அதிபர் அல் ஆசாத்துக்கு எதிராக, சிறிய அளவிலான போராட்டம் நடந்தது. இதனை ஒடுக்க நினைத்த அரசு, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் ஒன்றிணைந்ததால், உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, உள்நாட்டுப் போரில் அமெரிக்கா, சவுதி அரேபியா, ரஷ்யா, துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தலையிட்டன.

அதிபரின் ஆதரவு மற்றும் எதிர் படைகளுக்கு, இந்நாடுகள் அளித்த ராணுவ, பொருளாதார, அரசியல் உதவிகளால் போர் தீவிரமடைந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உலக நாடுகளின் போர்க்களமாக இருக்கும் சிரியாவில் இதுவரை 3 லட்சத்து 46,600 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 70 சதவீத மக்கள் வறுமையிலும் உணவுத் தட்டுப்பாட்டாலும் தவிக்கின்றனர். அதேபோல், சுமார் 10 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்து விட்டனர் என்று ஐ.நா. தெரிவிக்கின்றது.

SCROLL FOR NEXT