உலகம்

மலாலா - கிரெட்டா துன்பர்க் சந்திப்பு

செய்திப்பிரிவு

கிரெட்டா துன்பர்க் மற்றும் மலாலா இருவரும் பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

மலாலா (22) ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்த நிலையில் லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கு பெற்ற கிரெட்டா துன்பர்க்கைச் சந்தித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தாங்கள் சந்திப்பை புகைப்படங்களாக எடுத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் இருவரும் பதிவிட்டனர்.

மலாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கிரெட்டா துன்பர்க்கிடம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டு, நன்றி என்று இதய வடிவிலான எமோஜியுடன் பதிவிட்டிருந்தார்.

பொது வாழ்க்கையில் இளம் பெண்களின் அடையாளமாக மாறியுள்ள இவ்விருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதற்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மலாலா

பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயதுச் சிறுமியாக இருந்த அவரை கடந்த 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உயர் தப்பினார் மலாலா.

உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்தார் மலாலா. இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமைக்கும் மலாலா சொந்தக்காரர் ஆனார்.

இந்நிலையில் தற்போது ஐநா சபை, கடந்த 10 ஆண்டுகளில் உலகிலேயே மிகவும் பிரபலமான பதின்பருவத்தினர் என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

கிரெட்டா துன்பர்க்

16 வயதான கிரெட்டா, ஐக்கிய நாடுகள் சபையில் உலகத் தலைவர்களைக் கேள்வி எழுப்பி ஆற்றிய உரை மிகப் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகளால் அடையாளம் காணப்பட்டார் கிரெட்டா துன்பர்க்.

வெள்ளிக்கிழமை தோறும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மூலம் உலக நாடுகளின் தலைவர்களுக்குக் கொண்டு வருகிறார் கிரெட்டா.

SCROLL FOR NEXT