தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் 
உலகம்

2 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை: தென்கொரியா திட்டம்

செய்திப்பிரிவு

கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் சுமார் 2 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்ய தென்கொரியா திட்டமிட்டுள்ளது.

தென் கொரியாவில் கரோனா வைரஸுக்கு இதுவரை 977 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 2 லட்சம் பேருக்கு கோவிட் - 19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பரிசோதனையை நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பாதிப்பு கடுமையாக இருப்பதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் கவலை தெரிவித்துள்ளார்.

இதுவரை 22 பேர் கோவிட்-19 ( கரோனா வைரஸ் ) காய்ச்சலில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளதாகவும், தென்கொரியாவில் 22,550 பேருக்கு வைரஸ் பாதிப்பில்லை என்றும் அந்நாட்டு நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் நீண்டகால நோய் இருக்கும் முதியவர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்கா தன் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தென் கொரியாவுக்குச் செல்லும் மக்களுக்கு 2-ம் எண் எச்சரிக்கையும் அமெரிக்கா விடுத்துள்ளது.

இதேபோல் பிரிட்டனும், தங்கள் நாட்டைச் சேர்ந்த மக்கள் தென் கொரியாவின் டேகு, சியாங்டோ நகருக்கு அவசியம் ஏற்பட்டால் மட்டுமே செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT