இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் கடுமையான மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்தோனேசிய அதிகாரிகள் தரப்பில், “இந்தோனேசியாவின் தென் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஜகர்த்தா உள்ளிட்ட நகரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மின் தடை நீடிக்கிறது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளம் காரணமாக ஜாவா தீவில் மலையேற்றம் சென்ற பள்ளி மாணவர்களில் 8 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்று இந்தோனேசிய போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வருடத் தொடக்கத்தில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு 60 பேர் வரை பலியாகினர். 1 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.