மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள். 
உலகம்

ஈரானில் நிலநடுக்கம்: எல்லைப் பகுதியில் 8 பேர் பலி; கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாக துருக்கி தகவல்

செய்திப்பிரிவு

ஈரான் எல்லையில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் இதன் அண்டை நாடான கிழக்கு துருக்கியில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியானதாக துருக்கி உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு தெரிவித்தார்.

ஈரான் எல்லையில் வான் மாகாணத்தில் பல கிராமங்களில் சேதமடைந்த படங்களை துருக்கி தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

இதுகுறித்து அனடோலியா செய்தி ஊடகம் கூறுகையில், ''ஈரான் எல்லையில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக வான் மாகாணத்தில் பல கிராமங்களில் கட்டிங்கள் இடிந்து விழுந்தன. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர். 21 பேர் காயமடைந்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் 8 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா தெரிவித்தார்.

காலை 9:23 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, ஈரானிய கிராமமான ஹபாஷ்-இ ஒலியாவுக்கு அருகே, எல்லையிலிருந்து 10 கிலோ மீட்டர் (ஆறு மைல்) தொலைவில் இருந்தது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ஆறு கிலோ மீட்டர் ஆழத்தைக் கொண்டிருந்தது என்று தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாட்டின் அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் மொஜ்தாபா கலேடி கூறுகையில், ''ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் நான்கு கிராமங்களில் 25 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் வான் மாகாணத்தில் பல கிராமங்களில் சேதம் ஏற்பட்டது'' என்றார்.

SCROLL FOR NEXT