டொனால்டு ட்ரம்ப் 
உலகம்

அகமதாபாத் செல்லும்போது ஒரு கோடி பேர் என்னை வரவேற்பார்கள்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம்

செய்திப்பிரிவு

அகமதாபாத்தில் ஒரு கோடி பேர் என்னை வரவேற்பார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வரும் 24, 25-ம் தேதி அரசு முறை பயணமாக அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகிறார்.இதுகுறித்து அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான, கடற்படைத் தளத்தில் அவர் நேற்று கூறியதாவது:

இந்திய பயணத்தின்போது அகமதாபாத் நகருக்கு செல்கிறேன். அங்கு விமான நிலையம் முதல் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம் வரை சுமார் 60 லட்சம் முதல் ஒரு கோடி பேர் வரை திரண்டு எனக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். இதை நினைக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ட்ரம்ப் நண்பருக்கு சிறை

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர்.

இதில் ஹிலாரியை தோற்கடிக்க சமூக வலைதளங்களில் அவர் குறித்த எதிர்மறையான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும் இதன் பின்னணியில் ரஷ்ய உளவு அமைப்புகள் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையின் நீதிக் குழு விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையை சீர்குலைக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நெருங்கிய நண்பர் ரோஜர் ஸ்டோன் (67) முயன்றதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கை அமெரிக்க விசாரணை நீதிமன்ற நீதிபதி அமி பெர்மன் ஜாக்சன் விசாரித்தார்.

ரோஜர் ஸ்டோனுக்கு 40 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ரூ.14 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT