உலகம்

புதிய நத்தை இனத்துக்கு கிரேட்டா தன்பர்க் பெயர்

செய்திப்பிரிவு

ஆசியாவில் அண்மையில் கண்டறியப்பட்ட புதிய நத்தை இனத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் சிறுமி கிரேட்டா தன்பர்க்கின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நெதர்லாந்தைச் சேர்ந்த பரிணாம வளர்ச்சி ஆய்வாளர் மென்னோ சில்துய்ஸென் தலைமையிலான விலங்கியல் அறிஞர்கள் புருனெய் நாட்டில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, அங்குள்ள ஆற்றங்கரையோரத்தில் இதுவரை பட்டியலிடப்படாத நத்தை இனம் ஒன்றினை அவர்கள் கண்டறிந்தனர். நிலத்தில் வாழும் தன்மையுடைய இந்த புதிய நத்தை இனத்துக்கு அவர்கள் ‘க்ராஸ்பெடோட்ராபிக் கிரேட்டா தன்பர்க்' என பெயர் சூட்டியுள்ளனர்.

பருவநிலை மாறுபாட்டை சரிசெய்வதற்காக ஸ்வீடனைச் சேர்ந்த 17 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக புதிய நத்தை இனத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். - பிடிஐ

SCROLL FOR NEXT