உலகம்

நொறுங்கிய இந்தோனேஷிய விமானத்தில் 5 லட்சம் டாலர்கள்

ராய்ட்டர்ஸ்

இந்தோனேஷியாவில், 54 பேருடன் மலையில் மோதி வெடித்து சிதறிய விமானத்தில் 6.5 பில்லியன் ரூபியா (இந்தோனேஷிய நாணயம்) பணம் இருந்தது தெரியவந்துள்ளது.

கிழக்கு நாடுகளில் ஏழ்மையில் தவிக்கும் மக்களுக்கு உதவிட இந்தப் பணம் எடுத்து செல்லப்பட்டதாக அந்நாட்டு தபால்துறை அதிகாரி ஹர்யோனோ தெரிவித்தார். 6.5 பில்லியன் ரூபியா என்பது அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 5 லட்சம் ஆகும்.

இது குறித்து ஜெயபுரா தபால் அலுவலகத்தின் தலைவர் ஹர்யோனோ கூறும்போது, "அந்தப் பணம் மொத்தமும் 4 பைகளில் கொண்டுவரப்பட்டது" என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

விமானத்தில் மிகப் பெரிய தொகை எடுத்து செல்லப்பட்டதும் விமானம் விபத்துக்குள்ளானதையும் அதிகாரிகள் சந்தேகப் பார்வையில் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே பணம் கொண்டு செல்லப்பட்டது குறித்து ராய்ட்டர்ஸ் நிறுவன கேள்வி எழுப்பியதற்கு விமான நிலைய அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

விமான பாகங்கள் கண்டெடுப்பு

இந்நிலையில், ஓக்பிசி மாவட்ட மக்கள், விமானம் மலையில் மோதியதை பார்த்ததாகவும், அதன் உடைந்த பாகங்களை பார்த்ததாகவும் கூறியதை அடுத்து அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் அந்தப் பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர், சில பாகங்களை கண்டெடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம், 54 பயணிகளுடன் ஜெயபுரா விமான நிலையத்தில் இருந்து ஆக்சிபில் நோக்கிப் புறப்பட்ட திரிகானா ஏடிஆர் 42-300 என்ற அந்த விமானம் தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியது.

இது குறித்து தகவல் கிடைத்ததும், இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர், காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பாபுவா மாகாணத்தின் பின்டாக் மாவட்டத்தில் உள்ள ஒப்பாபே என்ற மலைப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று விமானம் ஒன்று மலையில் விழுந்து நொறுங்கியதை பார்த்ததாக தெரிவித்தனர்.

பலத்த காற்றுடன் கனமழை மற்றும் மோசமான வானிலையால், விமானம் மலை மீது மோதி விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தோனேஷியாவின் ஏ.டி.ஆர். 42–300 ரகத்தைச் சேர்ந்த விமானத்தில் 49 பயணிகள் மற்றும் 5 குழந்தைகள் என 54 பேருடன் உடன் 5 விமான குழுவினரும் பயணம் செய்தனர்.

இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்றே அஞ்சப்படுகிறது.

SCROLL FOR NEXT