பிரதமர் மோடியை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இந்தியாவின் வர்த்தக செயல்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எனவே இந்திய பயணத்தில் வர்த்தக ஒப்பந்தங்கள் பெரிய அளவில் செய்வதற்கு விருப்பமில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் அகமதாபாத்துக்கும் புதுடெல்லிக்கும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளனர். அகமதாபாத்தில் உள்ள 1.1 லட்சம் இருக்கைகள் கொண்ட மோட்டேரா மைதானத்தில் நடைபெறும் ‘கெம் சோ ட்ரம்ப்’ என்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
ட்ரம்ப் வருகையைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, "நமது மதிப்புமிக்க விருந்தினர்களுக்கு இந்தியா ஒரு மறக்கமுடியாத வரவேற்பை வழங்கும். இந்த விஜயம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும், இந்தியா-அமெரிக்கா நட்பை மேலும் பலப்படுத்த இது நீண்ட தூரம் செல்லும்'' என்று கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ''இந்தியப் பயணம் குறித்து நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளேன்'' என்று தெரிவித்தார்.
ட்ரம்ப் பயணத்துக்காக அகமதாபாத் நகரில் அனைத்துப் பகுதிகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சாலைகளை மீண்டும் உருவாக்குவது முதல் அனைத்து அழகுபடுத்தும் பணிகளிலும் அகமதாபாத் மாநகராட்சி இறங்கியுள்ளது.
இந்தநிலையில் தனது இந்திய பயணம் குறித்து பேசிய ட்ரம்ப் இன்று கூறியதாவது:
இந்தியாவுக்கு அடுத்தவாரம் செல்கிறேன். பல ஆண்டுகளாகவே அமெரிக்காவை இந்தியா மிக மோசமாக நடத்தி வருகிறது. உலகிலேயே அதிகம் வரி விதிக்கும் நாடு இந்தியா. அந்த நாட்டுடன் இணைந்து தொழில் செய்வது அமெரிக்காவுக்கு மிகவும் கடினம்.
பிரதமர் மோடியை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இந்தியாவின் வர்த்தக செயல்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எனவே இந்திய பயணத்தில் வர்த்தக ஒப்பந்தங்கள் பெரிய அளவில் செய்வதற்கு விருப்பமில்லை’’ எனக் கூறினார்.