உலகம்

அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்தியர் நியமனம்

செய்திப்பிரிவு

அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், அந்த நீதிமன்றத்தின் உயர் பதவியில் அமரும் தெற்காசியாவைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

அமெரிக்காவிலேயே அதிக அளவில் அதிகாரம் படைத்த நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் விளங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக, வாஷிங்டனில் உள்ள ‘ஃபெடரல் சர்க்கியூட் கோர்ட்' எனப்படும் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றமே அதிக அதிகாரம் கொண்ட அமைப்பாக கருதப்படுகிறது.

இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாசன் என்பவரைஅமெரிக்க அரசு கடந்த 12-ம் தேதி நியமித்துள்ளது. தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பது இதுவே முதன்முறையாகும்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்...

ஸ்ரீ ஸ்ரீநிவாசன் நிவாசன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பப் பின்னணியைக் கொண்டவர் ஆவார். இவரது தந்தை பத்மநாப ஸ்ரீநிவாசன் , திருநெல்வேலியில் உள்ள மேல திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்தவர். பணிநிமித்தமாக அவர் தனதுமனைவியுடன் சண்டிகருக்கு குடிபெயர்ந்தார். அங்குதான் ஸ்ரீ ஸ்ரீநிவாசன் பிறந்துள்ளார்.

இதையடுத்து, அவர்களின் குடும்பம் அமெரிக்காவின் கேனாஸ் மாகாணத்தில் உள்ள லாரன்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தது. ஸ்ரீ ஸ்ரீநிவாசன் அங்கேயே தனது பள்ளிப் படிப்பையும், சட்டப் படிப்பையும் நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து, அங்குள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கறிஞராக அவர் பணியாற்றினார். அமெரிக்க அரசின் சொலிசிட்டர் ஜெனரலாகவும் அவர்பணியாற்றியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, கலிபோர்னியா நீதிமன்றம் உள்ளிட்டபல்வேறு நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்த அவர், கடைசியாக அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வந்தார்.- பிடிஐ

SCROLL FOR NEXT