சீனாவில் துறைமுக நகரான டியாஞ்ஜினில் ரசாயன மற்றும் நச்சு பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு கிடங்குகளில் நடந்த வெடிப்புச் சம்பவங்களில் சுமார் 50 பேர் பலியாகினர். 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பலியானவர்களில் 12 பேர் தீயணைப்பு வீரர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் காயமடைந்தவர்களில் 66 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சீனாவில் உள்ள துறைமுக நகரமான டியாஞ்ஜின் பகுதியில் உள்ள ரூஹையில் தனியார் கிடங்கில் ஆபத்தான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கிடங்கில் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 11.20 மணிக்கு சிறிய தீ விபத்தும், அதற்கு பின்னர் வெடிகுண்டு வெடித்தாற்போல மிகப் பெரிய சப்தம் எழுந்ததாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களில் அருகே உள்ள பல கம்பெனிகளுக்கும் தீ வேகமாக பரவத் தொடங்கியது. இதனால், நகரமே தீயால் சூழ்ந்து மோசமான சூழலில் காணப்பட்டதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடனடியாக மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையிலும், அதனை வீரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆபத்தான ரசாயனப் பொருட்களை தண்ணீர் கொண்டு அணைத்தால் தீ வேகமாக பரவும் என்ற காரணத்தால் மீட்புப் பணி சற்று தாமதமானது. அதற்குள் தீ சுற்றுவட்டாரப் பகுதிகளை அடைந்தது.
இந்த மோசமான சம்பவத்துக்கு சுமார் 50 பேர் பலியாகினர். மேலும் சுமார் 700 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கரமான வெடிப்புச் சம்பவத்தின் சிசிடிவி பதிவை சீன தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
நகரமே தீப்பிழம்பால் எரிவது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புகை பயங்கரமாக பரவியதால் டியாஞ்ஜின் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மக்களை நகர நிர்வாகம் வெளியேற்றியுள்ளது.
இன்று காலை அளவிலும் நகரத்தின் சுற்றுப் பகுதியில் சில இடங்களில் லேசான தீ இருந்து வந்ததாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக தனியார் விடுதிகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இந்த மோசமான சம்பவம் காரணம் இதுவரையில் தெரியவில்லை.
பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு:
சம்பவ இடத்தில் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவாதல் அப்பகுதிக்கு சில கிலோமீட்டர்களுக்கு முன்னரே பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வெய்போ சமூக வலைதளத்தில் பொதுமக்கள் பலரும் வெடிப்புச் சம்பவம் தொடர்பான புகைப்படங்களை பதிவேற்றியிருந்தனர். ஆனால், அந்த புகைப்படங்களை சீன அரசு அகற்றிவிட்டதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
1000 கார்கள் எரிந்து நாசம்
வெடிப்புச் சம்பவ பகுதியில் இருந்து தெறித்துச் சிதறிய நெருப்புப் பிழப்பு ஒன்று அருகில் இருந்த ரெனால்ட் கார் தயாரிப்பு மையத்தின் பார்க்கிங் பகுதியில் விழுந்தது. இதில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆயிரம் கார்கள் எரிந்து நாசமாகின.
</p>