மாதிரிப் படம் 
உலகம்

மரணத்தின் அருகே சென்று திரும்பியுள்ளேன்: கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட சீனப் பெண்ணின் அனுபவம்

செய்திப்பிரிவு

சீனாவைத் தொடர்ந்து அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட அனுபவத்தை யாங்யாங் என்ற பெண் பகிர்ந்துள்ளார்.

சீனாவில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளில் ஒன்று வூஹானில் அமைந்துள்ள நம்பர் 7 மருத்துவமனை. இம்மருத்துவமனையிலிருந்து கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து போராடி மீண்டிருக்கிறார் 28 வயதான யாங்யாங்.

இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் சமைத்த முட்டைப் பொரியலைப் பதிவிட்டு தான் கரோனாவிலிருந்து மீண்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில் யாங்யாங் கூறியிருப்பதாவது:

''முதல் முறையாக முட்டை இவ்வளவு சுவையாக இருப்பதை உணர்கிறேன். மருத்துவமனைகளில் கரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களையும் பார்க்க ஆவலாக உள்ளேன். கரோனாவிலிருந்து மீண்டது மரணத்தின் அருகில் சென்று திரும்பிய அனுபவத்தைத் தந்திருக்கிறது.

சிலரது நிலைமை அவர்கள் மருத்துவரை அணுகுவதற்கு முன்னரே மோசம் அடைந்திருந்தது.

நான் உதவி கேட்டு தொலைபேசியில் அழைத்தபோது அதிகாரிகள் யாரும் எடுக்காமலிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று என்னால் நினைத்துக்கூடப் பார்க்க இயலவில்லை.

சீனாவில் தற்போது ஐந்தில் ஒருவர் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் போக்கு நாடு முழுவதும் நோயை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையை மக்களுக்குத் தரும் என்று நம்புகிறேன்”.

இவ்வாறு யாங்யாங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 2004 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார அமைப்பின் தகவலின்படி சுமார் 74,185 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 11,977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 14,376 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ளனர்.

SCROLL FOR NEXT