சவுதி மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தை வீணானது என்று ஏமன் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. இதில், சமீப நாட்களாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி கூட்டுப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்து வந்ததால் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், சவுதி - ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை வீணான ஒன்று என்று ஏமனின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான அல்லிஹ் அல் ஜப்வானி தெரிவித்துள்ளார்.
ஆனால், சவுதி மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை குறித்த எந்தக் கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.