பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சகத்தில் தாக்குதல் நடத்தி அமைச்சர் உட்பட 20 பேரை கொலை செய்த தற்கொலைப் படை தீவிரவாதி ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இராக், சிரியாவில் கொடூரங் களை நிகழ்த்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகளின் கை இப்போது பாகிஸ்தான் வரை நீண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாகாண உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் அமைச்சர் கர்னல் சுஜா கான்ஜாதா தலைமையில் நேற்று முந்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது அங்கு அத்துமீறி நுழைந்த தற்கொலைப் படை தீவிரவாதி உடலில் கட்டியிருந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அந்த கட்டிடம் தரைமட்டமானது. இந்த தாக்குதலில் அமைச்சர் கர்னல் சுஜா கான்ஜாதா உட்பட 20 பேர் உயிரிழந்தனர். 25 பேர் வரை படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் போலீஸாரும், புலனாய்வு அமைப்பினரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தீவிரவாத ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அதில் பாகிஸ்தானில் ஐஎஸ் அமைப்பினர் தங்கள் இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்துள்ளதாகவும், பஞ்சாபில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் தெஹ்ரி இ பாகிஸ்தான் அமைப்பு, ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உதவிகளை செய்துள்ளதாகவும் தெரிகிறது.