உலகம்

சிரியாவின் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும்: ட்ரம்ப்

செய்திப்பிரிவு

சிரிய அரசின் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “இட்லிப் பகுதியில் சிரிய அரசு செய்யும் அட்டூழியங்களுக்கு ரஷ்யா ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இது தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனிடம் அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த சில நாட்களாக ரஷ்யாவின் உதவியுடன் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் போர் விமானங்களைக் கொண்டு கடுமையான தாக்குதல் நேற்று நடத்தப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக சிரியாவில் அந்நாட்டு அதிபர் ஆசாத் நடத்தும் தாக்குதலை மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.

முன்னதாக, சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன.

போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

தவறவீடாதீர்

SCROLL FOR NEXT