அமெரிக்கா - தலிபான்களுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 8 பேர் பலியாயினர்.
இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் மாகாணத்தில் தலிபான்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 8 பேர் பலியாயினர். இதில் தலிபான்கள் தரப்பிலும் பலி ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலிபான்களின் சமூக வலைதளப் பக்கத்தில் ஆப்கன் அரசு நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 11 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது.
இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.
தவறவீடாதீர்!