உலகம்

குண்டுவெடிப்பில் சேதமடைந்த தாய்லாந்து பிரம்மா கோயில் வழிபாட்டுக்கு மீண்டும் திறப்பு

பிடிஐ

குண்டுவெடிப்பால் சேதமடைந்த தாய்லாந்து எரவான் பிரம்மா கோயிலில் பக்தர்களின் வழிபாட்டுக்காக நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்திலுள்ள எரவான் பிரம்மா கோயில் பிரசித்தி பெற்றது. பிரபல சுற்றுலாத்தளமான இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்து கோயிலாக இருப்பினும், நூற்றுக்கணக்கான புத்த பிட்சுகளும், புத்த மதத்தினரும் தினமும் வழிபாடு செய்கின்றனர்.

சொகுசு விடுதி, ஷாப்பிங் மால் அருகே அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த திங்கள்கிழமை குண்டு வெடித்தது. இதில், 20 பேர் உயிரிழந்தனர். இதில் 9 பேர் வெளிநாட்டவர்கள். தாய்லாந்து வரலாற்றில் இது மிக மோசமான தாக்குதலாகும். உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடலை அடையாளம் காண முடியவில்லை. இதில், 4 பேர் பெண்கள், ஒரு சிறுமி, ஒரு ஆண். மற்றொரு சடலம் மிக மோசமாக சிதைந்துள்ளதால், ஆணா, பெண்ணா எனக் கண்டறிவதிலேயே குழப்பம் நீடிக்கிறது.

பிரதமர் பிரயுத் சான் ஓ சா, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என உறுதியளித்துள்ளார்.

இக்குண்டுவெடிப்பில் பிரம்மா சிலை சேதமடைந்துள்ளது. இருப்பினும், பக்தர்களின் வழி பாட்டுக்காக நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT