இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் கொடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதால் அவர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்து அந்நாட்டு வெளியுறுவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை ராணுவத்தின் 58-வது பிரிவுக்கு தலைமை ஏற்று இருந்தவர் சவேந்திர சில்வா. இறுதிக்கட்டப் போரின் கடைசி ஒருமாதத்தில் மட்டும் 45 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்று ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.
போரின்போது, ஈழத் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்குக் குடிநீர், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல முயன்றபோது அதைத் தடுத்தவர் சவேந்திர சில்வா என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. போருக்குப் பின் சவேந்திர சில்வாவை இலங்கை அரசு ஐ.நா.வுக்கான நிரந்தர துணைத் தூதராக நியமித்தது. ஆனால், அதற்கு ஐ.நா. சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இலங்கை ராணுவத்தின் தளபதியாக சவேந்திர சில்வா இருந்து வருகிறார். அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ள சவேந்திர சில்வா திட்டமிட்டிருந்தார்.
ஆனால், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது, ஈழத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் சவேந்திர சில்வா ஈடுபட்டது ஐ.நா.விலும், பல்வேறு அமைப்புகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால் அவரை அமெரிக்காவுக்குள் நுழைய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தடை விதித்தது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்ட அறிக்கையில், "விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது, ஈழத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் சவேந்திர சில்வா ஈடுபட்டது ஐ.நா.விலும், பல்வேறு அமைப்புகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் தீவிரமான குற்றம் என்பதால் அவர் அமெரிக்காவில் நுழையத் தடை விதிக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு தங்கள் நாட்டு ராணுவத் தளபதிக்கு விதித்துள்ள தடைக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், "எங்கள் நாட்டு ராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறித்து வெளியான தகவல்களை முழுமையாகப் பரிசீலிக்காமல் ஆய்வு செய்யாமல் தடை விதித்ததைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் எனக் கூறிய குற்றச்சாட்டுகள் ஆய்வு செய்யாமல் கூறப்பட்டவை.
நம்பகத்தன்மையான தகவல்களைப் பெற்று, ஆய்வு செய்து, தங்கள் முடிவை அமெரிக்க அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கை அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இலங்கை ராணுவத் தளபதியை நியமிக்கும் எங்கள் நாட்டு அதிபரின் சிறப்பு உரிமையை, அதிகாரத்தை அமெரிக்கா கேள்வி கேட்டுள்ளது வருந்தத்தக்கது" எனத் தெரிவித்துள்ளது.