பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன் பேசியதை இந்தியா நிராகரித்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் துருக்கி அதிபர் எர்டோகன், ''முதல் உலகப் போரில் துருக்கி மக்கள் வெளிநாட்டினரை எதிர்த்தது போல், காஷ்மீர் மக்கள் தங்கள் துன்பத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர். காஷ்மீர் விவகாரம் பாகிஸ்தான், துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கு நெருக்கமானது ”என்று பேசினார்.
எர்டோகனின் இப்பேச்சு தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மேலும், எர்டோகனின் இப்பேச்சுக்கு இந்தியா சார்பில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரவீஷ் குமார் கூறும்போது, “ இந்தியாவுடன் ஒருங்கிணைந்துள்ள காஷ்மீர் பற்றிய அனைத்துக் கருத்துகளையும் இந்தியா நிராகரிக்கிறது. இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் .
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கும், பிராந்தியத்திற்கும் ஏற்படும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் உண்மை நிலைகளை துருக்கி புரிந்துகொள்ள வேண்டும் என்று துருக்கிக்கு அழைப்பு விடுக்கிறோம்” என்றார்.
முன்னதாக, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஐ.நா. சபை, வல்லரசு நாடுகளிடம் பாகிஸ்தான் முறையிட்டது. ஆனால், சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை.
இந்த நிலையில் துருக்கி பாகிஸ்தானுக்கு தனது ஆதரவை அளித்துள்ளது.