இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டொனால்ட் ட்ரம்ப் கூறும்போது, “ஃபேஸ்புக்கில் நான் முதல் இடத்தில் இருப்பதாகவும், இந்தியப் பிரதமர் மோடி இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
நான் இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியாவுக்குச் செல்ல இருக்கிறேன். நான் இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன். இப்பயணத்தில் இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறவுள்ளன” என்றார்.
பிப்ரவரி 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலானியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
ட்ரம்ப்பின் இந்தியப் பயணம் வெள்ளை மாளிகையால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின், இந்தியாவில் தன்னை லட்சக்கணக்கான மக்கள் வரவேற்பார்கள் என்று ட்ரம்ப் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் இந்தியப் பயணத்தின்போது வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பான பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு அதிநவீன ஏவுகணையை விற்க அமெரிக்க அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. மேலும், அமெரிக்காவின் அதிநவீன ‘எப்-15 இ.எக்ஸ். ஈகிள்' போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க போயிங் நிறுவனம் முன்வந்துள்ளது. இது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது.