ஜப்பானின் யோக்கோஹமா துறைமுகத்தில் இருக்கும் டைமண்ட் பிரின்ஸ் சொகுசு கப்பலில் தங்கி இருக்கும் பயணிகளில் 3-வது இந்தியருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அந்தக் கப்பலில் மொத்தம் 218 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹாங்காங் நகரத்தில் இருந்து கடந்தவாரம் டைமண்ட் பிரின்சஸ் கப்பல் ஜப்பான் வந்தது. இந்த பயணிகள் கப்பலில் மொத்தம் 3,711 பயணிகள் இருந்தனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தக் கப்பலில் 6 இந்தியப் பயணிகள், 132 பணியாளர்கள் என மொத்தம் 138 இந்தியர்கள் இருக்கின்றனர்.
இந்த கப்பல் ஹாங்காங்கில் இருந்து வந்ததால், கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருக்கும் எனும் அச்சத்தால், 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் ஜப்பான் சுகாதாரத்துறையினர் யோக்கஹமா துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த கப்பலில் உள்ள பயணிகளில் இதுவரை 218 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 2 இந்திய ஊழியர்களும் அடங்கும். இப்போது மூன்றாவதாக ஒரு இந்தியருக்கும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜப்பானில் உள்ள இந்தியத்தூதரகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், " கப்பலில் கோவிட்-19 வைரஸ்பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் 218 பயணிகளும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள். இதுவரை 3 இந்தியர்களுக்கு கோவிட் 19 வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மற்ற இந்தியர்களுக்குப் பரவவில்லை. இந்தியர்கள் 3 பேருக்கும் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை சீராகவும், முன்னேறியும் வருகிறது. ஜப்பானிய அதிகாரிகளுடன் தொடர்ந்து இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கப்பலில் இருக்கும் பயணிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட பயணிகளில் கோவிட் -19வைரஸ் தாக்குதல் இல்லாமல் இருப்பவர்கள் கப்பலில் இருந்து இறக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தது.
மேலும், இந்தியப் பயணிகள், கப்பல் ஊழியர்களைத் தொலைப்பேசி, மின்அஞ்சல் வழியாக இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு, ஜப்பான் சுகாதாரத்துறையின் கட்டுப்பாடுகள் விதிமுறைகளை விளக்கிக் கூறியுள்ளனர்.
கப்பலை நிர்வகிக்கும் நிறுவனத்துடன் இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர். கப்பலில் இருக்கும் 6 இந்தியப் பயணிகளுக்குத் தேவையான உதவிகளை அளிக்கவும் ஏற்பாடுகளை இந்தியத் தூதரக அதிகாரிகள் செய்துள்ளனர்.