சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள இட்லிப் பகுதியைக் கைப்பற்றுவதற்காக சிரிய அரசுப் படைகள் இறுதிக்கட்டத் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதுகுறித்து சிரிய போர் கண்காணிப்புக் குழு கூறும்போது, ''சிரியாவின் அரசுப் படைகள் ரஷ்யப் படை உதவியுடன் சிரியாவின்
இட்லிப் பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களின் கிழக்குப் பகுதியை கைப்பற்றின. இந்நிலையில் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள பிற பகுதிகளில் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதில் பொதுமக்களின் குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. கடந்த சில நாட்களில் ஆசாத் படைகள் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். இட்லிப் பகுதியில் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்த உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.