சீனாவில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,361 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கரோனா வைரஸுக்கு சுமார் 59,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “சீனாவில் கோவிட் -19 ( கரோனா வைரஸுக்கு கோவிட் - 19 என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது) காரணமாக புதன்கிழமையன்று சுமார் 242 பேர் பலியாயினர். இது வைரஸ் பாதிப்பால் சீனாவில் ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இதுவரை கோவிட் -19 வைரஸால் 1,361 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 59,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. சீனா மட்டுமல்லாமல் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளது.
கரோனா வைரஸ் பிற நாடுகளுக்கு கடுமையான அச்சுறுத்தலைத் தந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சீனா தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.