தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கியதாக தொடரப்பட்ட 2 வழக்குகளி்ல் ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதுக்கு தலா ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008-ல் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது மூளையாக செயல்பட்டதாகவும் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கியதாகவும் இந்தியா குற்றம்சாட்டி உள்ளது.
இதன் அடிப்படையில், பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்புத் துறை சயீது மற்றும் பலர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. லாகூரில் உள்ள சிறையில் சயீது அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீதான 2 வழக்குகளில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு வழங்கப்படும் என தீவிரவாத தடுப்பு நீதிமன்ற நீதிபதி அர்ஷத் ஹுசைன் புட்டா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ஹபீஸ் சயீது பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தன் மீதான அனைத்து வழக்குகள் மீதான விசாரணையும் முடிந்த பிறகு தீர்ப்பு வழங்க வேண்டும் என ஹபீஸ் சயீது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
எனினும், தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதி, சயீது மனு மீது பதில் அளிக்குமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் ஹபீஸ் சயீதுக்கு ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம், ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
இரண்டு வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த புகார் தொடர்பாக ஐ.நா. அமைப்பு பாரிஸ் நகரில் கூடி விவாதிக்க உள்ள நிலையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.