உலகம்

சீனாவில் தொடரும் கரோனா வைரஸ் பலி: 1,113 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,113 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு புதன்கிழமை கூறும்போது, ''சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு செவ்வாய்க்கிழமை மட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,113 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 44,653 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 8,000க்கும் அதிகமானவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பிற நாடுகளுக்கு கடுமையான அச்சுறுத்தலைத் தந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சீனா தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. சீனா மட்டுமல்லாமல் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளது.

SCROLL FOR NEXT