உலகம்

மோடி செப்டம்பரில் அமெரிக்கா பயணம்: இந்திய தூதரக அதிகாரி புதிய தகவல்

பிடிஐ

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின்போது, டிஜிட்டல் பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தும் என இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையின் 70-வது ஆண்டு அமர்வில் பங்கேற் பதற்காக வரும் செப்டம்பரில் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லவுள்ளார். அதிகாரப் பூர்வ அறிவிப்பு இது வரை வெளியிடப்படவில்லை என்ற போதும், வரும் செப்டம்பர் 27-ம் தேதி சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள அமெரிக்க வாழ் இந்தியர் களிடையே அவர் உரையாற்ற விருப்பது அவரது பயணத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 18 ஆயிரம் பேர் கொள்ளளவு கொண்ட எஸ்ஏபி அரங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

நியூயார்க் மற்றும் சிலிக்கான் வேலி செல்லும் மோடி, தொழில்நுட்ப நிபுணர்கள், பன்னாட்டு நிறுவன தலைவர்கள் உள்ளிட்டோரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் அதிவேக பொருளாதார மேம் பாடு ஆகியவற்றை மேலும் முன்னெடுத்துச் செல்ல இந்தச் சந்திப்பை அவர் மேற்கொள்ள வுள்ளார்.

இந்தியத் தூதர் அருண் கே சிங் இதுதொடர்பாகக் கூறும்போது, “வரும் செப்டம்பரில் பிரதமர் மோடி நியூயார்க் மற்றும் கலிபோர் னியா வருவார் என எதிர்பார்க் கப்படுகிறது. தொழில் நுட்பத்துறை மற்றும் தொழில் துறை பிரதிநிதிகளை அவர் சந்தித்து உரையாடுவார். தொழில்முனைவு, புத்தாக்கம், டிஜிட்டல் பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் இந்தியாவின் கவனம் இருக்கும். பருவநிலை மாறுபாடு மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆகிய இரு பிரச்சினைகளும் மோடி, ஒபாமா சந்திப்பில் முக்கியத்துவம் பெறும்’’ எனத் தெரிவித்தார்.

“பருவநிலை மாறுபாடு பிரச்சினைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும்” என அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிறப்பு ஆலோசகர் பீட்டர் லவோய் தெரிவித்துள்ளார்.

மோடியின் அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு துணைச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இந்தியா மற்றும் இலங்கை பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்கும் அவர் மோடியின் பயணம் மற்றும், முதல் இந்தியா-அமெரிக்கா இடையிலான உத்திப்பூர்வ மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்பாக விவாதிக்க உள்ளார்.

SCROLL FOR NEXT