உலகம்

முதல் முறையாக இந்தியாவுக்கு வருகிறார் ட்ரம்ப்: பிப்ரவரி 24,25 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம்

செய்திப்பிரிவு

இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிப்ரவரி மாதம் 24, 25-ம் தேதிகளில் இந்தியா வர இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது ட்ரம்ப்பின் முதல் இந்தியப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிப்ரவரி 24, 25-ம் தேதிகளில் இந்தியாவுக்கு வர இருக்கிறார். அதிபரின் இந்தியப் பயணத்தில் அகமதபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது குஜராத்தில் அமைந்துள்ளது. இது இந்தியப் பிரதமர் மோடி பிறந்த மாநிலம். மேலும், மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றிய பகுதி.

கடந்த வார இறுதியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், இந்தியப் பிரதமர் மோடியும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இப்பயணம் இந்தியா - அமெரிக்கா இடையே இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று உறுதி பூண்டனர்” என்று தெரிவித்துள்ளது.

இதனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்தியப் பயணத்தில் அமெரிக்கா - இந்தியா இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம், இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அப்போது, அமெரிக்காவில் ‘ஹவுடி மோடி' நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT