சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு கூறும்போது, ''கரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் இதுவரை 1,011 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 24 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸால் 42,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளது.
மேலும், சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் சுமார் 2,097 பேருக்குப் புதிதாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் நீண்ட நாட்களுக்குப் பின்னர், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளையும் நலம் விசாரித்தார்.
முன்னதாக, சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.