கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் சிறு வணிகர்கள் மிகவும் சிரமத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பரபரப்புடன் இயங்கிய சீனாவின் ஹூவான் நகரம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பு பகுதிகள் மட்டுமல்லாது அதன் சுற்றுப்புற மாகாணங்களும் கரோனா வைரஸால் வணிக ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்துவிட்டதால் அவர்கள் தங்கள் வீடுதிகளில் காற்று வாங்குவதாகக் கூறுகிறார் வாங் லீ. கரோனா வைரஸால் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் சிறு வணிகர்களும் ஒருவர்தான் வாங் லீ.
கரோனா வைரஸால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்து லீ கூறும்போது, ''புத்தாண்டுக் காலகட்டங்களில் நாங்கள் இந்த இடத்தில் விருந்தினர்களாக 10 மேசைகளைப் போடுவோம். ஆனால், தற்போது இங்கு யாரும் வருவதில்லை. சீனப் புத்தாண்டு காலகட்டங்களில் நாங்கள் சுமார் 10,000 யுவானைச் சம்பாதிப்போம். ஆனால், இந்தப் புத்தாண்டில் எங்கள் தொழில் முடக்கப்பட்டுவிட்டது. நாங்கள் இந்த நோய் எங்களைவிட்டு கடக்கும்வரை காத்திருக்க வேண்டும். எனக்கு வேறு திட்டம் இல்லை” என்று தெரிவித்தார்.
சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் ஜனவரி 25-ம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 908 ஆக அதிகரித்துள்ளது.