கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கு 1000 யுவான் பரிசாக வழங்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.
இதுகுறித்து சீன ஊடகங்கள் , “கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கு 1000 யுவான் பரிசாக வழங்கப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள ஹுபே மாகாணத்தில் முதல் முதலாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் மற்றும் பிற நோய் அறிகுறிகளுடன் வந்து பரிசோதனை செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சீனாவில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 908 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.