பிரதமர் நரேந்திர மோடியின் 2-வது அமெரிக்க வருகையை ஆவலுடன் எதிர்நோக்குவதாக, அந்நாட்டு வெளியுறவுத் துறை துணை அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை (தெற்கு, மத்திய ஆசியாவுக்கான) துணை அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிஷா தேசாய் பிஸ்வால் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அமெரிக்க-இந்திய உறவு குறித்து பிஸ்வால் கூறும்போது, " வரும் செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் தொடங்க உள்ள அமெரிக்க-இந்திய போர்த்திறன் மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கான பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார்.
இது அவரது 2வது முறையான அமெரிக்கப் பயணம். இந்தச் சந்திப்பில் நியூயார்க் மற்றும் கலிபோர்னியா மாகாணங்களுக்கும் மோடி வர உள்ளார். மோடியின் வருகையால் கலிபோர்னியா மாகாணத்துக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், அவரது வருகையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
பிரதமர் மட்டுமல்லாமல் அவருடன் வரும் வெளியுறவு அமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோரின் வருகையை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர் ஆகியோர் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் கடந்த பத்தாண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து 100 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையால் இது மேலும் உயர்ந்து 500 பில்லியன் டாலராகும்" என்று தெரிவித்தார்.