அமெரிக்காவில் தன் மனைவி, குழந்தைகள், உறவினர் உட்பட 5 பேரைக் கொன்ற கொலைக் குற்றவாளி ஏபெல் ஒச்சா என்பவருக்கு விஷ ஊசிப் போட்டு மரண தண்டனை டெக்ஸாஸில் நிறைவேற்றப்பட்டது.
17 ஆண்டுகளுக்கு முன்பாக டலாஸை உலுக்கிய இந்தக் கொடூர சம்பவத்துக்கான நீதி நேற்று வழங்கப்பட்டது. விஷ ஊசி போடப்பட்டு மாலை 6.43 மணிக்கு இவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இவரது மரண தண்டனையை இவரது உறவினர்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டனர், அவர்களை நோக்கி ஏபெல் கூறும்போது, “என்னால் ஏற்பட்ட வலிக்கு மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். உங்கள் அனைவரையும் என் சகோதரிகளாகவே பாவிக்கிறேன். என்னை மன்னித்ததற்காக நன்றி” என்றார்.
விஷ ஊசியானபெண்ட்டோபார்பிட்டால் மெதுவே உள்ளே செலுத்தப்பட்டது, ஒச்சாவிடம் எந்த ஒரு வினையும் இல்லை, கண்கள் மூடின.
17 ஆண்டுகளுக்கு முன்பாக அன்றைய இருண்ட தினத்தில் கொகெய்ன் போதை மருந்து வெறியில் இருந்த ஏபெல் ஒச்சா, செசிலியா (32) என்ற தன் மனைவி, கிறிஸ்டல் என்கிற 7 வயது மகள், அனாஹி என்ற 9 மாத கைக்குழந்தை மகள், 56 வயது மாமனார் பார்ட்டலோ அல்வீஸோ, 20 வயது மனைவியின் தங்கை ஜாக்குலின் சாலே ஆகியோரை கதறக்கதற சுட்டுக்கொன்றான்.
ஒச்சா கொகெய்ன் போதைக்கு அடிமையானவன், வாரத்துக்கு 300 டாலர்கள் வரை கொகெய்னுக்குச் செலவு செய்து வந்தான், ஒரு கட்டத்தில் போதைத்தடுப்பு மறுவாழ்வு மையத்துக்கும் சென்று சிகிச்சைப் பெற்று வந்தான். குடும்பத்தினரை கொல்வதற்கு முன்பு 10 நாட்களாக கொகெய்னை அவன் பயன்படுத்தவில்லை, ஆனால் கொகெய்ன் பயன்படுத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
ஆனால் கொகெய்ன் இல்லாமல் இருக்க முடியாமல் மனைவியை பணம் கேட்டு சித்ரவதை செய்து பணத்தை வாங்கிக் கொண்டு கொகெய்னை வாங்கி தன் வீட்டுக்குப் பின்னால் பயன்படுத்திய ஒச்சாவுக்கு அது போதவில்லை, மேலும் கொகெய்ன் தேவைப்பட்டது. ஆனால் மனைவியிடம் கேட்டால் நிச்சயம் கிடைக்காது. அப்போதுதான் கொலைவெறி மூள தன் சிறு துப்பாக்கியால் அனைவரையும் தோட்டாக்கள் தீரும் வரை சுட்டுள்ளான் ஒச்சா.
சுட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்று துப்பாக்கி ரவைகளை மேலும் வாங்கிக் கொண்டு திரும்பிய போது 7 வயது மகள் இருப்பதைப் பார்த்து அவளையும் சுட்டுக்கொன்று விட்டான்.
பிறகு தலைமறைவானான், ஆனால் ஒரு ஏடிஎம்-ல் பணம் எடுக்க முயன்ற போது போலீஸார் ஒச்சாவை பிடித்து கைது செய்தனர். பிற்பாடு கோர்ட்டில் தன் குடும்பத்தையே சுட்டது தனக்குத் தெரியாது, ஞாபகம் இல்லை என்றான் ஒச்சா.
கடைசியில் விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றுமாறு தீர்ப்பளிக்கப்பட நேற்று ஒச்சாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.