சிரியாவின் இட்லிப் பகுதியில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலரை ஐக்கிய நாடுகள் சபை விடுவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளர் கூறும்போது, “சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப் பகுதியில் தீவிரமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக கூடுதலாக 30 மில்லியன் அமெரிக்க டாலரை இன்று விடுவிக்கிறோம்” என்றார்.
சிரியாவின் வடக்குப் பகுதியில் அத்துமீறி நுழைத்து துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் இஸ்ரேலும் அவ்வப்போது சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக சிரியாவில் கடந்த சில நாட்களாக சண்டை அதிகரித்து வருகிறது.
கடந்த இரு மாதங்களில் சிரியாவில் நடக்கும் வன்முறை காரணமாக சுமார் 50,000 பேர் தங்கள் சொந்தப் பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிரிய உள்நாட்டுப் போர்
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்த உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.