சிரிய அரசுப் படைகள் மீது துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து துருக்கி அமைச்சகம் கூறும்போது, ''சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள இட்லிப் பகுதியில் சிரிய பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் 4 துருக்கி வீரர்கள் பலியாகினர். 9க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இட்லிப் பகுதியில் துருக்கிய நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே சிரிய அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியதாகவும் துருக்கியின் இத்தாக்குதலில் சிரிய ராணுவ வீரர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாகவும் சிரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் துருக்கி அதிபர் எர்டோகன், சிரியாவின் இட்லிப் பகுதிகளில் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தும் என்று அறிவித்தார். இந்நிலையில் துருக்கி ராணுவம் ஞாயிற்றுக்கிழமை சிரியாவுக்குள் அத்துமீறி நுழைந்தது. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றன. இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இதற்கு உலக அளவில் கண்டனம் எழுந்ததைத் தொடர்ந்து போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.