இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்திற்கு அருகே சுமார் 5 ஏவுகணைகள் வீசப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “இராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்குப் பகுதிக்கு அருகே மொசூல் நகரில் அமெரிக்க விமானத் தளத்திற்கு அருகே தொடர்ச்சியாக ஐந்து ஏவுகணைகள் வீசப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணைத் தாக்குதலில் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் பேரணி சென்றனர். இந்த நிலையில் அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகே தாக்குதல் நடந்த நிலையில், தற்போது அமெரிக்க விமானத் தளம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் ஆதில் அப்துல் மஹ்திக்கு எதிராக பல மாதங்களாக அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
இராக்கில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 300க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான போராட்டத்தை போராட்டக்காரர்கள் கையில் எடுத்துள்ளனர்.
முன்னதாக, கடந்த மாதத் தொடக்கத்தில் இராக்கில், ஈரான் புரட்சிப் படையின் தளபதி சுலைமான் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.