உலகம்

கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி; அமைச்சர் தலைமையில் பணிக்குழு அமைப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் உயர் பணிக்குழுவை அமெரிக்க அரசு அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டார்.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் இந்தியா உள்பட 20 நாடுகளில் பரவியுள்ளது. கரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை சீனாவில் மட்டும் 213 பேர் உயிரிழந்துள்ளனர். 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் நேற்று வாஷிங்டனில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் அலெக்ஸ் அசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் கிரிஷம் கூறும்போது, “அமைச்சர் அலெக்ஸ் அசர் தலைமையில் உயர் பணிக்குழுவை அமைக்க ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் ஒத்துழைப்புடன் இந்த பணிக்குழு செயல்படும்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தாக்குதல் இல்லாதவாறு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்தக் குழுவில் மருத்துவ நிபுணர்கள், தொற்றுநோயை கட்டுப்படுத்தும் நிபுணர்கள், வெள்ளை மாளிகயைச் சேர்ந்த அதிகாரிகள், பல்வேறு துறை அதிகாரிகள் இடம்பெறுவர்.

தினந்தோறும் இந்த பணிக்குழு சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு அதன்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்றார்.

SCROLL FOR NEXT