ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் சிரியாவில் 10 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா, துருக்கியும் ஆதரவு அளித்து வருகின்றன.
ரஷ்யாவின் ராணுவ உதவியுடன் சிரியாவின் பெரும் பகுதியை அதிபர் ஆசாத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார். கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்ய விமானப் படை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் சிரியாவின் இட்லிப் மாகாணம், ஆரிஹா பகுதியில் ரஷ்ய விமானப்படையின் போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசின. இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
சிரியாவின் டால் டாம் பகுதியில் அமெரிக்க ராணுவம் முகாமிட்டுள்ளது. அந்த நகருக்குள் ரஷ்ய ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் நுழைய முயன்றனர். அவர்களை அமெரிக்க வீரர்கள் இடைமறித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் பொறுமை காத்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு ரஷ்ய வீரர்கள் வழிவிலகி மாற்றுப் பாதையில் சென்றனர்.
சிரியாவில் ரஷ்ய, அமெரிக்க ராணுவங்கள் முகாமிட்டுள்ளதால் இருதரப்பினரும் பரஸ்பரம் பொதுவான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் மோதல் தவிர்க்கப்பட்டு வருகிறது என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.