மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் மீது 70 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.4,500 கோடி) நிதி முறைகேடு புகார் தொடர்பாக பிரதான எதிர்க்கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதால், 2013 பொதுத்தேர்தல் முடிவுகளை ரத்து செய்துவிட்டு, புதிதாக தேர்தல் நடத்தும்படி மக்கள் நீதிக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
1எம்டிபி என்ற அரசு முதலீட்டு நிதியத்திலிருந்து ரூ.4,500 கோடி நிதி மோசடி செய்து அதனை, தனது சொந்த வங்கிக் கணக்குகளில் போட்டு வைத்ததாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரின் 6 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஊழல் தடுப்பு அமைப்பு, அந்தத் தொகையின் பெரும்பகுதி அரசு முதலீட்டு நிதியத்திலிருந்து எடுக்கப்பட்டது அல்ல என்றும், 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது நன் கொடை என்ற பெயரில் வசூலிக் கப்பட்டது எனவும் தெரிவித்தது.
இதையடுத்து பிரதமர் மீது, எதிர்க்கட்சியான மக்கள் நீதிக் கட்சி தேர்தல் முறைகேடு வழக்கு தொடர்ந்துள்ளது.
வரம்பு மீறிய செலவு
நஜீப்பின் ஆளும் கட்சியான தேசிய முன்னணி கூட்டணி, தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட செலவை விட 26 மடங்கு அதிகம் செலவிட்டுள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளது.
மறு தேர்தல்
மக்கள் நீதிக் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸா அன்வர் கூறும்போது, “பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தேசிய முன்னணி பின்பற்றிய அனைத்து விதமான லஞ்சம் மற்றும் ஊழல் உத்திகளை இந்த வழக்கு வெளிப்படுத்தும். முறைகேடான பரிவர்த்தனைகளுக்கு ஆதாரம் இருக்கிறது. எனவே, 2013-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளை செல்லாது என அறிவித்து விட்டு, புதிய தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இவ்வழக்கில், அரசு முதலீட்டு நிதியம், தேர்தல் ஆணையம், நஜீப்பின் ஆளும் கட்சியான மலாய் கட்சியின் பொதுச் செய லாளர் அட்னான் மன்சூர் ஆகி யோரின் பெயரையும் எதிர்க்கட்சி யான மக்கள் நீதிக் கட்சி சேர்த்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக கருத்து கேட்பதற்காக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை.
கடந்த 2009-ம் ஆண்டு 1எம்டிபி என்ற அரசு முதலீட்டு நிதியம் தொடங்கப்பட்டது. அப்போதிருந்து தற்போதுவரை அதன் ஆலோசனை வாரியத்தின் தலைவராக நஜீப் உள்ளார். இந்த அமைப்புக்கு தற்போது 1040 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.67,366 கோடி) கடன் உள்ளது. வெளிநாடுகளில் எரிசக்தித் துறையில் இந்த அமைப்பு மேற்கொண்ட முதலீடுகள் தோல்வியடைந்ததால் இந்த கடன் சுமை ஏற்பட்டது. இந்த அமைப்பின் பெரும் கடன் தொகை குறித்தும் வெளிப்படைத் தன்மை இல்லாதது குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த அமைப்பின் நிதிச் சுமை காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4 என்ற அளவில் கடந்த 1997-98-க்குப் பிறகு மோசமாக சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.