மைசூரை ஆண்ட மன்னரான திப்பு சுல்தானின் சர்ச்சைக்குரிய மோதிரம் லண்டனில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் ரூ.1.42 கோடிக்கு ஏலம் போனது. இந்த தகவலை பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
18 ம் நூற்றாண்டைச் சேர்ந்த திப்பு சுல்தான் தனது விரலில் அணிந்திருந்த மோதிரம் தேவநாகரி எழுத்தில் இந்து கடவுளான ராமரின் பெயர் பொறிக்கப்பட்டதாகும். முஸ்லிம் சுல்தான் ஒருவர் இந்து கடவுள் பெயர் பொறித்த மோதிரம் அணிந்திருந்தது வினோதமானது என்று ஏல நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
41.2 கிராம் எடைகொண்ட இந்த மோதிரத்தை மத்திய லண்டனில் நடந்த ஏலத்தில் பெயரை வெளியிட விரும்பாத ஒருவர் விலைக்கு எடுத்தார். உரிய மதிப்பை விட 10 மடங்கு கூடுதலாக அது ஏலம் போயுள்ளது. இந்த மோதிரம் ஏலத்துக்கு வராமல் தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என திப்பு சுல்தான் ஐக்கிய முன்னணி என்கிற அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
ஒருவேளை, இந்த மோதிரம் ஏலத்துக்கு வருமானால் இந்தியா சார்பில் வாங்குவதற்கு மனித நேய மாண்பாளர்களை ஊக்குவிக்கலாம் என்றும் யோசனை கூறப்பட்டிருந்தது. தனியாருக்கு ஏலம் விடப்பட்டால் அது பொது மக்களின் பார்வைக்கே வராமல் போய் விடும் என தேசிய உயராய்வு மையத்தின் பேராசிரியர் எஸ்.செட்டார் எச்சரித்திருந்தார் எனவும் பிபிசி தெரிவித்துள்ளது. .
முன்னதாக 2012ல் கிறிஸ்டி நிறுவனத்தில் இந்த மோதிரம் ஏலத்துக்கு வரும் என பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டது.
‘மைசூர் புலி’ என அழைக்கப்படும் திப்பு சுல்தான் கல்வியாளர், போர்வீரர், கவிஞர் என பலமுகங்களை கொண்டவர். மைசூர் சுல்தான் ஹைதர் அலியின் மூத்த மகனான இவர் தந்தையின் மறைவுக்குப் பிறகு சுல்தானாக பதவியேற்று மைசூரை 17 ஆண்டுகள் ஆண்டார்.
1799 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடைபெற்ற நான்காம் மைசூர் போரில் (1798-1799) மே 4 ஆம் தேதி வீரமரணம் அடைந்தார். இந்த போர் மைசூர் பேரரசுக்கும் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கும் இடையே நடந்தது. உயிரிழந்த அவரது விரலில் இருந்து இந்த மோதிரம் கழற்றி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அபூர்வ வயலின் ஏலத்திற்கு வருகிறது
பிரான்ஸின் பிரபல இசைக் கலைஞரான ருடால்ப் க்ரூட்சர் பயன்படுத்திய வயலின் நியூயார்க்கில் ஏலத்துக்கு வருகிறது. இந்த வயலின் ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.60 கோடி) வரை ஏலத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வயலின் கருவி செய்வதில் பிரபலமான இத்தாலியர் அண்டோனியோ ஸ்ட்ராடிவாரி என்பவர் 1731-ம் ஆண்டில் இந்த வயலினைச் செய்தார். இந்த வயலினை பிரான்ஸின் பிரபல இசைக் கலைஞரான இருந்த ருடால்ப் க்ரூட்சர் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 19-ம் நூற்றாண்டிலும் உபயோகித்து வந்தார். "க்ரூட்சர் தன் வாழ்நாள் முழுக்க தன்னுடன் வைத்திருந்த ஒரே வயலின் இதுதான். இது ஒரு சிறந்த இசைக்கருவி. சிறப்பான வடிவமைப்பு. கடந்த 25 ஆண்டுகளாக இது ஒரு பெட்டியில் மூடி வைக்கப்பட்டிருந்தது" என கிறிஸ்டீஸ் ஏல நிறுவனத்தின் சர்வதேச இசைக் கருவி நிபுணர் கெர்ரி கியானே தெரிவித்துள்ளார்.
க்ரூட்சருக்குப் பிறகு இந்த வயலின் அமெரிக்கத் தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதியுமான வில்லியம் ஆண்ட்ரூஸ் கிளார்க்கின் குடும்பத்தினரிடம் 100 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. 2011ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் ஸ்ட்ராடிவாரியஸ் வயலின் ஒன்று 1.6 கோடி அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ. 96 கோடி) விற்பனையானதுதான் இதுவரை அதிக தொகைக்கு ஏலம் போன வயலின் என்ற சாதனையாக இருக்கிறது.