கோபியின் மரணத்தின்போது பிரார்த்தித்த அனைவருக்கும் அவரது மனைவி வனேஸ்ஸா நன்றி தெரிவித்துள்ளார்.
கோபி ப்ரையன்ட் தனது 13 வயது மகள் ஜியானா உட்பட 8 பேருடன் தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஆரஞ்ச் கவுண்டியில் உள்ள சான்டா அனா நகரில் இருந்து தவுசண்ட் ஆக்ஸ் என்னும் பகுதியை நோக்கிச் சென்றார். அப்போது, கடும் பனி மூட்டத்தின் நடுவே கலாபஸாஸ் என்னும் இடத்தில் உள்ள மலை மீது மோதி ஹெலிகாப்டர் நொறுங்கியது. இதில் கோபி ப்ரையன்ட், அவரது 13 வயது மகள் ஜியானா உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து உலகம் முழுவதும் உள்ள கூடைப்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களையும், செய்தி ஊடகங்களையும் கோபியின் மரணச் செய்தி ஆக்கிரமித்துக் கொண்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி விராட் கோலி வரை பிரபலங்கள் பலரும் கோபி பிரையன்ட் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று (30.01.20) காலை கோபி ப்ரையன்ட்டின் மனைவி வனேஸ்ஸா ப்ரையன்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கையைப் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''இந்தக் கொடுமையான சூழலில் எங்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்த லட்சக்கணக்கான மக்களுக்கு நானும் என் மகள்களும் நன்றி சொல்ல விரும்புகிறோம். உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி. எங்களுக்கு நிச்சயமாக அவைதான் இப்போதைய தேவை. அன்பான கணவரும், என் குழந்தைகளுக்கு அற்புதமான தந்தையுமான கோபி, மற்றும் எங்கள் அழகான குழந்தை ஜியானா ஆகியோரின் திடீர் மரணம் எங்களை முற்றிலுமாக நிலைகுலையச் செய்துவிட்டது. தங்களின் அன்பானவர்களை இழந்த மற்ற குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.
எங்களுடைய வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கோபியும் ஜியானாவும் எங்கள் வாழ்க்கையில் கிடைக்க நாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் எங்களோடு எப்போதும் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் எங்களிடமிருந்து சீக்கிரமே பறித்துக் கொள்ளப்பட்ட அழகான ஆசிர்வாதங்கள்.
நாளை எப்படி இருக்கும் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர்கள் இல்லாத வாழ்க்கையைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. நாங்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் அளவற்றது. நான் அவர்களைக் கட்டியணைக்க வேண்டும், ஆசிர்வதிக்க வேண்டும், முத்தமிட வேண்டும். அவர்கள் எங்களோடு எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்''.
இவ்வாறு வனேஸ்ஸா தெரிவித்துள்ளார்.
கோபி வனேஸ்ஸா தம்பதிக்கு ஜியானா தவிர்த்து நடாலியா, பியான்கா, காப்ரி என்ற மகள்கள் உள்ளனர்.