உலகம்

இராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்

செய்திப்பிரிவு

இராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகே ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இராக் அதிகாரிகள் தரப்பில், “இராக் தலைநகர் பாக்தாத் அருகே அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் ஞாயிற்றுக்கிழமை 5 ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் காரணமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் இதுவரை எந்தத் அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் இராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் பேரணி சென்றனர். இந்த நிலையில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் ஆதில் அப்துல் மஹ்திக்கு எதிராக பல மாதங்களாக அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

இராக்கில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 300க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான போராட்டத்தை போராட்டக்காரர்கள் கையில் எடுத்துள்ளனர்.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் இராக்கில், ஈரான் புரட்சிப் படையின் தளபதி சுலைமான் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT