ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.
இதுகுறித்து உள்ளூர் ஊடகங்கள் கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சி - 130 என்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் விபத்தில் பலியானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் காடுகள் அடர்ந்த 10 மில்லியன் ஹெக்டேர் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் காட்டுத் தீ ஏற்பட்டதில் 2,000 வீடுகள் எரிந்தன. 28 பேர் இறந்தனர். கங்காரு, கோலா கரடி உட்பட பல அரிய லட்சக்கணக்கான வனவிலங்குகள் இந்தக் காட்டுத் தீ காரணமாக இறந்தன.