நான் மட்டும் இன்று அமைச்சராக இல்லாவிட்டால் ஏர் இந்தியா நிறுவனத்தை நிறுவனத்தை ஏலம் கேட்க முயல்வேன் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பெரும் கடனிலும், நஷ்டத்திலும் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையில் அமைச்சர் பியூஷ் கோயல் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கும் உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.
இந்த மாநாட்டில் "2020-ம் ஆண்டில் இந்தியாவின் கண்ணோட்டம் மற்றும் திட்டம்" என்ற தலைப்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.
அவர் கூறுகையில், " பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முதல் முறையாக ஆட்சிக்கு வந்தபோது, நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்தது.
நான் மட்டும் மத்திய அமைச்சராக இல்லாவிட்டால், ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் கேட்டிருப்பேன். உலக அளவில் வேறு நாட்டு விமான நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து சிறப்பாக, திறமையாக நிர்வகித்திருக்கலாம்.
இன்றுள்ள இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற நாடாக மாறியுள்ளது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குகிறது. முதலீட்டாளர்கள் மிகுந்த கவுரவத்துடன், நம்பிக்கையுடன் தொழில் செய்யலாம்.
வங்கிகளில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து, அதை வலிமைப்படுத்தியது எங்கள் அரசு. ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் வாராக் கடன் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்த்துவைத்து பொதுத் துறை வங்கிகளின் சிக்கல்களைத் தீர்த்துள்ளன.
பொதுத்துறை வங்கிகள் சிறப்பாகச் செயல்படவில்லை என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கவில்லை என்று நம்புகிறேன். உலக அளவில் 2008-2009 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களைத் தனியார் வங்கிகள்தான் ஏற்படுத்தியதால் பொருளாதாரம் சீர்குலைந்தது. பொதுத்துறை வங்கிகளால் அல்ல.
இந்தியாவில் உள்ள ஏராளமான தனியார் வங்கிகள்கூட எங்களுக்குப் பெரிதாகப் பெயர் எடுத்துக்கொடுக்கவில்லை. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு நடத்தும் பொதுத்துறை வங்கிகள்தான் தேசத்துக்குச் சிறப்பாகச் சேவை செய்து செயல்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.