சிரியாவில் உள்ள எண்ணெய் வயல்களைக் கைப்பற்ற நினைத்த ரஷ்யப் படைகளை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது. இச்செய்தியை துருக்கி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து பெயர் குறிப்பிடாத உள்ளூர் அதிகாரிகள் கூறும்போது, ''சிரிய - துருக்கி எல்லையில் உள்ள மிலன் நகரில் அமைந்துள்ள எண்ணெய் வயல்களை அணுக முயன்றபோது அவர்களை அமெரிக்கப் படை தடுத்து நிறுத்தியது.
இதனைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் தமது முயற்சியைக் கைவிட்டு, ராணுவ முகாம்களுக்குச் சென்றன. இதில் இரு படைகளுக்கும் இடையே எந்த சண்டையும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
சிரியாவிலிருந்து பெரும்பாலான படைகள் வெளியேறி இருந்தாலும் ஐஎஸ் மற்றும் ரஷ்யப் படைகளிலிருந்து எண்ணெய் வயல்களைக் காக்க அமெரிக்கப் பாதுகாப்புப் படையில் ஒரு சிறு பிரிவு அங்கு முகாமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பலர் கொல்லப்பட்டனர்.