உலகம்

பாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு; விலை கடும் உயர்வு: வரிசையில் காத்திருக்கும் மக்கள்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவு கோதுமை மாவு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோதுமை மாவை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானில் உணவுக்காக அதிகஅளவு கோதுமையே பயன்படுத்தப்படுகிறது. அரைத்த கோதுமை மாவை வாங்கியே பொதுமக்கள் அதிகஅளவில் பயன்படுத்தி வருகின்றனர். பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ஒரு கிலோ சுமார் 40 ரூபாய் என்ற அளவில் விலை இருந்து வந்தது.

இந்தநிலையில் பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு கிலோ கோதுமை மாவு ரூ. 200 வரை விற்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தானில் இருந்து அதிகஅளவு கோதுமை மாவு கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நாளொன்றுக்கு 100க்கு மேற்பட்ட லாரிகளில் கோதுமை மாவு ஆப்கானிஸ்தானுககு கடத்திச் செல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் கைபர் பக்துன்வாகா மற்றும் சிந்து மகாணங்களில் இருந்தே அதிகஅளவு கோதுமை மாவு கடத்தப்படுகிறது.

இதனால் பாகிஸ்தானில் உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ கோதுமை மாவு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கோதுமை மாவை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT